தொல்லியல் துறை ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள்

தொல்லியல் துறை ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள்  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.2.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டு ஏழு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் – மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளைக் காணொலிக் காட்சி (Video Conferencing) வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.

தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது. தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும்.

அண்மைக்காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை,                    சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்

 1. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் (கொந்தகை, அகரம், மணலூர்), சிவகங்கை மாவட்டம் – எட்டாம் கட்டம்
 2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் – மூன்றாம் கட்டம்
 3. கங்கைகொண்டசோழபுரம், அரியலூர் மாவட்டம் – இரண்டாம் கட்டம்
 4. மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் – இரண்டாம் கட்டம்
 5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – முதல் கட்டம்
 6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் – முதல் கட்டம்
 7. பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம் – முதல் கட்டம்

 

ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 20.1.2022 அன்று அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பிற்கிணங்க,

கீழடி

கீழடி அகழாய்வில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்களின்  தொடர்ச்சி, மேம்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாக விளங்கும் அரிய தொல்பொருட்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு கொண்டதற்கான கூடுதல் சான்றுகளைத் தேடியும்,  நகர நாகரிகக் கூறுகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்த எட்டாம் கட்ட அகழாய்வு நடைபெறும்.

 

சிவகளை

தண் பொருநை ஆற்றங்கரையில் (தாமிரபரணி ஆற்றங்கரை) வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தினரின் மேம்பட்ட பண்பாடு 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்ய  கூடுதல் சான்றுகளைத் தேடி அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

மயிலாடும்பாறை

கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழாய்விலும் அவற்றில் கிடைக்கக் கூடிய தொல்பொருட்களுக்கும், வரட்டனபள்ளி மற்றும் கப்பலவாடி போன்ற ஊர்களிலும் கண்டறியப்பட்டதன் வாயிலாக புதியக் கற்கால மனிதர்கள் தங்களது வேளாண்மை நடவடிக்கைகளை தமிழகத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தனர் என்பதனை நிரூபிக்க சான்றாக இத்தளம் அமையும்.

கங்கைகொண்டசோழபுரம்

சோழப்பேரரசின் மாமன்னன் முதலாம் இராசேந்திரனின் தலைநகரான கங்கைகொண்டசோழபுரத்தின் நகரமைப்பு மற்றும் மண்ணில் புதைந்துள்ள  கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்து அரண்மனையின் வடிவமைப்பினை தெரிந்து கொள்வது இந்த அகழாய்வின் நோக்கமாகும்.

துலுக்கர்பட்டி

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரிலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலையில் நம்பி ஆற்றின் இடது கரையில் துலுக்கர்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து கண்ணநல்லூர் செல்லும் சாலையில் 2.5 கி.மீ தொலைவில், வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இந்த அகழாய்வின் குறிக்கோள் செறிவுமிக்க இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை மற்றும் தொல்பொருட்களின் தன்மை ஆகியவற்றைக் கண்டறிவதாகும். நம்பி ஆற்றின் கரையில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதே இவ்வகழாய்வின் நோக்கமாகும்.

வெம்பக்கோட்டை

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து தெற்கே 15 கி.மீ தொலைவில் வைப்பாறு ஆற்றின் இடது கரையில் வெம்பக்கோட்டை என்ற ஊர் அமைந்துள்ளது. மேடு என்றும் உச்சிமேடு என்றும் அழைக்கப்படுகின்ற 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கின்ற தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிப்படுத்துகின்றது.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வின் நோக்கமானது காலவாரியாக தொடர்ச்சியாக நிலவிய நிலவியல் உருவாக்கத்தின் பின்னனியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கற்கருவிகளைச் சேகரிப்பதாகும்.

பெரும்பாலை

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் – மேலச்சேரி சாலையில் பென்னாகரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் பாலாற்றின் இடது கரையில் பெரும்பாலை என்னும் வராலாற்றுச் சிறப்புமிக்க இடம் அமைந்துள்ளது. இவ்வூர் கொங்கு நாட்டின் வடவெல்லையாக தொன்றுதொட்டு கருதப்படுகிறது. இங்குள்ள வாழ்விட மேடானது தற்போதைய நிலவியல் அமைப்பிலிருந்து 3 முதல் 4 மீட்டர் உயரத்தில் 75 ஏக்கர் நிலப் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. பாலாற்றின் ஆற்றங்கரைகளில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவது இந்த அகழாய்வின் நோக்கமாகும்.

15 இலட்சம் ஆண்டுகள் கொண்ட இந்நிலப்பகுதியின் தொன்மை வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு அதிகளவிலான சான்றுகள் தேவை. எழுதப்படுகின்ற வரலாறானது அறிவியல் அடிப்படையிலான சான்றுகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அன்று முதல் இன்று வரையிலான கால கட்டங்களில் விடுபட்டுள்ள வரலாற்றினைப் பூர்த்தி செய்து எழுதுவதற்கு அகழாய்வுகள் செய்வது அவசியமாகும்.

தொடக்க வரலாற்றுக் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் இருத்ததென்றும், தென்னிந்தியாவில் காணப்படவில்லை என்னும் கருதுகோள் ஆய்வாளர்களிடம் இருந்தது. கீழடி அகழாய்வானது கங்கைச் சமவெளியில் நிலவியது போன்ற நகர நாகரிகம் மட்டுமின்றி படிப்பறிவும் எழுத்தறிவும் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலே நிலவியது என்பதை நிலை நிறுத்தியுள்ளது.

ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகியத் தொன்மை வாய்ந்த ஊர்களைப் பெற்றுள்ள தண் பொருநை ஆற்றங்கரை (தாமிரபரணி) நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற உமி நீங்கிய நெல்மணிகளின் வழிப் பெறப்பட்ட காலக் கணக்கீடு நிலை நிறுத்தியுள்ளது.

அத்தகைய எண்ணங்களையும் நோக்கங்களையும் நிறைவு செய்வதற்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையானது ஏற்கனவே அகழாய்வுகளை  மேற்கொண்டு வரும் கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மட்டுமின்றி புதிதாக திருநெல்வேலி மாவட்டம் – துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டம் – பெரும்பாலை ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிதியாண்டியில் 5 கோடி ரூபாய் நிதியில் மேற்படி ஏழு தொல்லியல் அகழாய்வுகள், இரண்டு களஆய்வுகள் மற்றும் சங்ககால கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

TNPSC GROUP 2  PREVIOUS YEAR QUESTION PDF

TNPSC Group 4 Last 6 Years Old Question Papers

TNPSC Group 2/2A- STUDY MATERIALS

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் அகழாய்வுகள் இதுவரை இல்லாத அளவாக ரூ.5 கோடி ஒதுக்கீடு

Excavations at Seven locations in Tamilnadu with highest ever allocation of Rs.5 croreImage

Image

Image

Image

Image

Image

Image

Image

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: