டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது
2020-2021ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட திரு. செ. மூர்த்தி, திரு. கோ. பொன்னு புதியவன்,
திருமதி பி. லட்சுமி தேவி ஆகியோருக்கு விருதுகளையும், பரிசுத் தொகைகளையும் முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.
உழவர்களின் நலன் காத்திட வேளாண்மைத் துறையினை, வேளாண்மை – உழவர் நலத் துறை என பெயர் மாற்றம் செய்து, உழவர்களின் வருவாயை பெருக்கிட வேளாண்மை – உழவர் நலத் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழகத்தில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போது நடைமுறையில் பயன்படுத்தும் நெல் இரகங்களில் அத்தியாவசிய தாதுக்கள் போதுமான அளவு கிடைக்காததால், விவசாயிகள் மருத்துவக்குணம் அதிகம் நிறைந்த பாரம்பரிய நெல் இரகங்களை மீட்டெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாரம்பரிய நெல் இரகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பாரம்பரிய நெல் இரகங்களைப் பாதுகாத்துப் பயிரிடும் விவசாயிகளை ஆதரவளித்து ஊக்குவித்திடும் விதமாக “பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது” தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2020-21 ஆம் ஆண்டிற்கான “பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது” , கருப்பு கவுணி இரகம் சாகுபடி செய்து எக்டருக்கு 10,672.5 கிலோ அதிக மகசூல் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த திரு.செ.மூர்த்தி அவர்களுக்கு விருதுடன் பரிசுத்தொகையாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், வாசனை சீரக சம்பா இரகம் சாகுபடி செய்து எக்டருக்கு 10,200 கிலோ மகசூல் பெற்று இரண்டாம் இடம் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.கோ.பொன்னு புதியவன் அவர்களுக்கு விருதுடன் பரிசுத்தொகை 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், ஆத்தூர் கிச்சிலி சம்பா சாகுபடி செய்து எக்டருக்கு 10,024.875 கிலோ மகசூல் பெற்று மூன்றாவது இடம் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி பி. லட்சுமிதேவி அவர்களுக்கு விருதுடன் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கி சிறப்பித்தார்.