‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் இந்திய நிறுவனங்களின் இடம்
உலகின் 500 பெரிய நிறுவனங்களின் பட்டியலில் எல்ஐசி
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபார்ச்சூன் இதழ், ஒவ்வொரு ஆண்டும் வருவாய் அடிப்படையில் உலகின் 500 பெரிய நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். 2022 ஆண்டுக்கான ‘ஃபார்ச்சூன் குளோபல் 500’ பட்டியல் சமீபத்தில் வெளியானது. முதன்முறையாக எல்ஐசி நிறுவனம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களே இந்தப் பட்டியலில் எடுத்துக்கொள்ளப்படும். பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி, இவ்வாண்டு மே மாதம் பங்குச் சந்தையில் பட்டியலானது. அதையடுத்து எல்ஐசி ‘ஃபார்ச்சூன் குளோபல் 500’ பட்டியலில் 98-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 9 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஐந்து நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களாகும். இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (142), ஓஎன்ஜிசி (190), எஸ்பிஐ (236), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் (295) என்ற வரிசையில் உள்ளன. இந்திய தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 104-வது இடத்தில் உள்ளது.
டாடா குழுமத்தின் இரண்டு நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. டாடா மோட்டார்ஸ் (370), டாடா ஸ்டீல் (435) என்ற வரிசையில் உள்ளன. ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் 437 – வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் உள்ளது.
‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் இந்திய நிறுவனங்களின் இடம்