Important Current Affairs – Dec 29
பிஎம் – கிசான்
அடிமட்டத்தில் இருக்கும் விவசாயிகளை அதிகாரப்படுத்த வேண்டுமென்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிரதமரின் உழவர் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் (பிஎம் – கிசான்) 10-வது தவணை நிதியுதவியை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி பகல் 12.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் விடுவிக்கிறார். ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட இந்தத் தொகை மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்கள் பயனடையும்.
பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பயனாக வழங்கப்பட்டு வருகிறது. இது 4 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த நிதிப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக விடுவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடிக்கும் மேல் கவுரவத் தொகை விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர், சுமார் 351 விவசாய உற்பத்தி அமைப்புகளுக்கு ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகை பங்கு மானியமாக விடுவிப்பார். இதன் மூலம் 1.24 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள்.
மத்தியப்பிரதேசத்தின் மோவ்-ல் இந்திய ராணுவம் குவான்டம் சோதனைக்கூடத்தை நிறுவியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் மோவ்-ல் உள்ள தொலைத் தகவல் தொடர்பு பொறியியலுக்கான ராணுவக் கல்லூரியில் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகத்தின் உதவியுடன் இந்திய ராணுவம் அண்மையில் குவான்டம் சோதனைக்கூடத்தை நிறுவியுள்ளது. மோவ் பகுதிக்கு ராணுவ தலைமை தளபதி ஜென்ரல் எம் எம் நரவானே வருகை தந்த போது, இதுபற்றி அவரிடம் விவரிக்கப்பட்டது.
இதே நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு மையத்தையும், இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. குவான்டம் தொழில்நுட்பத்தில் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, அடுத்த தலைமுறை தகவல் தொடர்புக்கு பாய்ச்சல் வேகத்தில் உதவும்.
அடல் கண்டுபிடிப்பு தரவரிசை: ஐஐடி மெட்ராஸ் இந்தியாவின் மிகுந்த புத்தாக்கம் நிறைந்த கல்வி நிறுவனம் ஆகும் இன்று அறிவிக்கப்பட்ட புத்தாக்கங்களுக்கான இந்திய அரசின் அடல் கண்டுபிடிப்பு தரவரிசையில் (ARIIA) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் #1 இடத்தைப் பிடித்துள்ளது
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ் (ஐஐடி மெட்ராஸ்) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவின் மிகுந்த புத்தாக்கம் நிறைந்த கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவால் தொடங்கப்பட்ட புத்தாக்க சாதனைகளுக்கான நிறுவனங்களின் (ARIIA) அடல்கண்டுபிடிப்பு தரவரிசையில் #1 இடத்தைப் பிடித்துள்ளது.
ஐஐடி மெட்ராஸ் இந்த தரவரிசையில் ‘CFTIகள் (மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள்)/மத்திய பல்கலைக்கழகம்/தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் (தொழில்நுட்பம்)’ என்னும் பிரிவில் இடம்பெற்றுள்ளது.