பழம்பெரும் பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் 92-வது வயதில் காலமானார்
பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி 2நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவிப்பு
பழம்பெரும் பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார். மெலடி குயீன் என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92. அவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக இரண்டு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். 2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற அவரது இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும்.
லதா மங்கேஷ்கர் 1929-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி பிறந்தார். அவரது இயற்பெயர் ஹேமா. அவரது தந்தை பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர் ஒரு மராத்தி, கொங்கனி இசை வித்வான். பிரபல பின்னணி பாடகர் ஆஷா போஸ்லே உள்ளிட்ட 5 சகோதர, சகோதரிகளில் லதா மூத்தவராவார். அவரது தந்தை பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர் ஒரு சாஸ்திரீய இசைக்கலைஞராகவும், நாடக நடிகராகவும் திகழ்ந்தார்.
லதா மங்கேஷ்கர் தமது 13 வயதில், கிட்டி ஹசால் என்னும் மராத்தி படத்துக்காக முதன்முதலில் பின்னணி பாடினார். 1942-ம் ஆண்டு பகிலி மங்கலாகவுர் என்னும் மராத்தி படத்தில் நடித்தார். 1946-ல் , முதன்முதலாக வசந்த் ஜோகலேகர் இயக்கிய ஆப் கி சேவா மெய்ன் என்னும் இந்தி படத்துக்கு பின்னணி பாடினார்.
1972-ல் லதா மங்கேஷ்கர் பரிச்சே படத்திற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான முதலாவது தேசிய விருதைப் பெற்றார். பல ஆண்டு காலத்தில், பெருமைமிகு பாரத ரத்னா, ஆஃபீசர் ஆப் தி லெஜியன் ஆப் ஆனர், தாதா சாகிப் பால்கே விருது உள்பட பல தேசிய, சர்வதேச விருதுகளை அவர் பெற்றுள்ளார். 1984-ம் ஆண்டில் மத்தியப்பிரதேச அரசும், 1992-ல் மகாராஷ்டிரா அரசும் பாடும் திறமையை வளர்க்கும்வ்வகையில், லதா மங்கேஷ்கர் பெயரில் விருதுகளை நிறுவியுள்ளன.