தமிழ்த்தாய் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடல்

தமிழ்த்தாய் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடல்

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகள் தவிர்த்த அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

1970ஆம் ஆண்டு, மார்ச் 11ஆம் தேதியன்று நடந்த அரசு விழாவில் அன்றைய முதல்வர் கருணாநிதி பேசும்போது, ”இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும். ‘நீராருங் கடலுடுத்த’ எனும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அமையும்” என்று அறிவித்தார்.

அதன்படியே 1891ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள பாயிரத்தில் “தமிழ்த் தெய்வ வணக்கம்” எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயைப் போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 23 நவம்பர் 1970ஆம் ஆண்டு அன்று, கருணாநிதி தலைமையில் அமைந்த அன்றைய தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணையும் வெளியிட்டுள்ளது.

 

அவ்வரசாணையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருகிறது.

2021-ஆம் ஆண்டு திசம்பர் 17-தேதி அன்று மு. க. ஸ்டாலின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்தது.

1. மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய கீழ்க்கண்ட வரிகளைக் கொண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்தின் கீழ்க்கண்ட வரிகள், 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடப்படவேண்டும்,
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”
2. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
3. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.
4. மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
5. பொது நிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும்.
6. ​அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: