பெண்களின் அரசியல் பங்கேற்பு, பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள்
l சபரிமலை நுழைவு போராட்டம்
மாதவிடாயைக் காரணம் காட்டி 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கேரளத்தில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. கோயிலுக்குள் செல்ல இருபாலினத்தவருக்கும் உரிமை உண்டு என்கிற அடிப்படையில் சபரிமலை கோயிலுக்குள் செல்ல பெண்களையும் அனுமதிக்கும்படி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. பல்வேறு தடைகளுக்குப் பிறகு அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என 2018இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து பெண்கள் தங்களைக் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கும்படி போராடினர். இந்தப் போராட்டம் எல்லை கடந்து பல்வேறு மாநிலங்களிலும் பெண்களின் ஆதரவைப் பெற்றது.
l வரிவிதிப்புக்கு எதிரான போராட்டம்
பெண்கள் மாதந்தோறும் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 14 சதவீதமாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்து 2016இல் பெண்களும் பெண்ணிய அமைப்புகளும் போராடினர். பெண்களின் அடிப்படைத் தேவையான சானிட்டரி நாப்கின்களை ஆடம்பரப் பொருட்களின் பட்டியலில் சேர்த்ததும் போராட்டத்துக்குக் காரணமாக அமைந்தது.
l மீடு இயக்கம்
அமெரிக்கச் செயற்பாட்டாளர் தரனா புர்க் என்பவரால் 2006இல் தொடங்கப்பட்ட, ‘மீடூ’ இயக்கம், ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பெண்கள் பலரும் பாலியல் குற்றச்சாட்டு வைத்ததைத் தொடர்ந்து 2017இல் உலகின் கவனத்துக்கு வந்தது. பாதிக்கப்பட்ட, குரலற்ற பெண்களுக்கான மாபெரும் இயக்கமாக வலுப்பெற்றது. திரைத்துறை மட்டுமல்லாமல் உயர் கல்வி நிறுவனங்கள், ஊடகம், சட்டத் துறை, அரசியல் என்று பல்வேறு தளங்களிலும் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் சித்திரவதை குறித்து உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பொதுவெளியில் சொல்லத் தொடங்கினர்.
l நீதிக்காக ஒலித்த குரல்கள்
டெல்லியில் 23 வயது கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 2012இல் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். அவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததும் போராட்டம் நாடு முழுவதும் மிகத் தீவிரமடைந்தது. அச்சமற்றவள் என்கிற பொருள் தரும் ‘நிர்பயா’ என்கிற பெயரால் அவர் அழைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட வர்மா குழு அளித்த பரிந்துரைகளின்படி பாலியல் வல்லுறவு வழக்கில் 2013இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ‘நிர்பயா சட்டம்’ ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கதுவா சிறுமி, ஹாத்ரஸ் பாலியல் வன்முறை, உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது, தமிழகத்தில் சேலம் சிறுமி கொல்லப்பட்டது என்று நாடு முழுவதும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதைக் கண்டித்துப் பெண்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
l கன்னியாஸ்திரிக்கு ஆதரவான போராட்டம்
தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக ஜலந்தரைச் சேர்ந்த முன்னாள் பிஷப் பிராங்கோ முல்லைக்கல் மீது கேரளத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி 2018இல் புகார் கொடுத்தார். அந்த வழக்கில் பிராங்கோ முல்லைக்கல்லை விடுவித்து 2022இல் தீர்ப்பு வழங்கியது கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பெண்கள் பலரும் போராடினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகத் தாங்கள் கைப்பட எழுதியவற்றை #ஸ்டாண்ட் வித் நன்ஸ் என்கிற ஹேஷ் டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
l விலைவாசிக்கு எதிரான போராட்டம்
விவசாயப் பணியில் இருக்கும் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் எவ்வித வர்க்க வேறுபாடும் இல்லாமல் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களுக்காக வீதிகளில் இறங்கிப் போராடினர். குறிப்பாக விஷம் போல் ஏறும் விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம், அதிக வரிச்சுமை போன்றவற்றைக் கண்டித்து மகாராஷ்டிரப் பெண்கள் கையில் பூரிக்கட்டை, மண்ணெண்ணெய் டின், கரண்டி போன்றவற்றை ஏந்தி வீதிகளில் வலம் வந்தனர். மேற்கில் மகாராஷ்டிரம், கோவா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் வடக்கில் பிஹார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களிலும் கிழக்கில் அசாம், மேற்குவங்கத்திலும் தெற்கில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசத்திலும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. 1973இல் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு அவ்வப்போது நடந்த பெண்களின் எழுச்சிமிக்கப் போராட்டங்கள் 1975இல் நெருக்கடி நிலை அமலுக்கு வந்ததால் அடங்கிப்போயின.
l அம்மாக்களின் போராட்டம்
அசாம் ஆயுதப் படை வீரர்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, மிக மோசமாகச் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட 32 வயது தங்ஜம் மனோரமா என்கிற பெண்ணுக்கு நீதி கேட்டு 12 தாய்மார்கள் 2004இல் நடத்திய நிர்வாணப் போராட்டம் நாட்டையே உலுக்கியது. இறந்துவிட்ட மகளுக்காக ஒப்பாரி வைத்து அழுவதுபோல் தலையை விரித்துவிட்டபடி நிர்வாணமாக நின்றனர். மணிப்பூரில் உள்ள இம்பால் பள்ளத்தாக்கின் காங்க்லா கோட்டை முன்பு இவர்களது போராட்டம் அரங்கேறியது. ஆடைகளோடு சேர்த்து அச்சத்தையும் களைந்திருந்தனர். முதலில், ‘இந்திய ராணுவமே எங்களையும் வல்லுறவுக்கு ஆளாக்கு, எங்களையும் கொன்றுபோடு’ என்று மெதுவாகத்தான் தொடங்கியது அவர்களது கோஷம். பின்னர் உறுதியாகவும் திடமாகவும் ஒலித்தது அவர்களுடைய குரல்.
l மதுவுக்கு எதிராக இணைந்த கைகள்
70-களில் மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மதுவுக்கு எதிரான போராட்டத்தைப் பெண்கள் கையில் எடுத்தனர். வீதிகளில் இறங்கிப் போராடினர். 1990-களில் ஆந்திரப் பிரதேசத்திலும் 2010-க்குப் பிறகு தமிழகத்திலும் இந்தப் போராட்டம் வலுப்பெற்றது. தன் நாட்டு மக்களையே குடிநோயாளியாக்கி அழகு பார்க்கும் அரசின் செயலைப் பெண்கள் வன்மையாகக் கண்டித்தனர். தமிழகப் பெண்கள் சில பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடைத்து நொறுக்கினர். குடியால் குடும்பங்கள் சிதை வதையும் பெரும்பாலன பெண்கள் தங்கள் கணவனைக் குடிக்குப் பலியாகக் கொடுத்ததையும் இந்தப் போராட்டங்கள் வெளிச்சமிட்டுக் காட்டின.
l ஷாகீன் பாக் போராட்டம்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் டெல்லியில் பெண்கள் நடத்திய போராட்டம் ஈடு இணையில்லாதது. இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்த இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் திரண்டனர். எலும்பை உறையவைக்கும் பனியிலும் போராட்டக் களத்தில் அமர்ந்திருந்தனர். ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை வண்ணாரப்பேட்டையிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
l அரசியல் என்பது ஆணுக்கான களமாகவே காலம்காலமாகக் கருதப்பட்டு வரும் நிலையில் பெண்களுக்கான வாய்ப்புகளைச் சட்டம்போட்டுத்தான் உருவாக்க வேண்டியுள்ளது. கிராமப்புறப் பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டம், கிராம நிர்வாகப் பணியில் மூன்றில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்தது. தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
l சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கான தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது பெண்களின் அரசியல் பங்களிப்பை முன்னகர்த்திச் செல்லும் காரணிகளில் ஒன்று. அதுவரை ‘மகளிர் அணி’யை மட்டுமே பெண்களுக்கென உருவாக்கி வைத்திருந்த அரசியல் கட்சிகள், இட ஒதுக்கீட்டுக்குப் பிறகு அவர்களைத் தேர்தல் களம்காணச் செய்தன. உள்ளாட்சிப் பொறுப்புகளிலும் மேயர் பதவிகளிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பொறுப்பில் இருக்கும் பெண்கள், அவர்கள் வீட்டு ஆண்களின் கைப்பாவையாகச் செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்தாலும் அதிகாரத்தில் பெண்களின் எண்ணிக்கை உயர்வது மாற்றத்துக்கான முன்னறிவிப்பு.
கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி மாணவிகளும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த பெண்களும் தேர்தலில் அதிக அளவில் பங்கேற்பது இளம் தலைமுறையினருக்கு அரசியல் அறிவில்லை என்கிற புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தரபுரத்தின் மேயராகப் பொறுப்பேற்றுக்கொண்டது இந்திய அளவில் கொண்டாடப்பட்டது.
SOURCE : HINDU TAMIL