பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம்
பொறையுடைமை
இந்த பகுதியில் திருக்குறள் பொருட்பால்: பொறையுடைமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
பொறையுடமையாவது, பிறர் தமக்குத் தீமை செய்யும்பொழுது தாமும் அவர்களுக்குத் தீங்கு செய்யாது பொறுத்துக்கொள்ளுதல். அறிந்தோ, செருக்காலோ, அல்லது மடமையாலோ ஒருவர் நமக்குத் தீங்கு செய்தபொழுது பொறுத்துக்கொள்வது மட்டுமல்ல அதை மறந்துவிடவும் சொல்கிறது இவ்வதிகாரப் பாடல்கள். பொறுமையை ‘வன்மையுள் வன்மை’ என்கிறது; பொறுமை காக்கப் பேராற்றல் வேண்டும்; பொறுமை உடையவர் நிறையுடை மாந்தர்; அவர் பொன்போல் போற்றப்படுவார்; அவர் என்றும் நினைக்கப்படுவர் என்று சொல்கின்றன இத்தொகுப்பிலுள்ள பாக்கள். பழி தீர்க்க எண்ணாது வேறு தகுதியான வழிகளில் தீர்வு காண்க என அறிவுரை கூறுகிறது ஒரு செய்யுள். இன்னாச்சொல் பொறுத்தார் துறந்தாரையும் தவம் செய்வாரையும் விட பெருமை பொருந்தியவர்; அவர் புனித உயிர்த்தன்மை கொண்டவர் (தூய்மையுடையார்) என ஏற்றிப் பாடுகின்றன இவ்வதிகாரத்துக் குறள்கள்.
பொறையுடைமை
பிறன் செய்த தீமையால் உள்ளத்தில் சினம் தோன்ற அதனால் பதிலுக்குத் தீயன செய்ய உந்துதல் உண்டாவது இயல்பு. அதைச் செயல்களில் வெளிப்படாதவாறு பொறுத்துக் கொள்ளுதலே பொறையுடைமை. பல்லுக்குப் பல், அடிக்கு அடி, உதைக்கு உதை என்பதே சரியான பழிதீர்க்கும் முறை என்ற தவறான கருத்துக் கொண்டோர்க்கு, ஒருவன் தனக்கு மிகை செய்தால், தானும் அதைச் செய்யாமல் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் அடங்கியது இவ்வதிகாரம்.
அதிகார வைப்பு முறை எண்ணி (பொறையுடமை அதிகாரம் பிறனில் விழையாமை எனும் அதிகாரத்திற்குப் பின் வருவது), நல்லொழுக்கத்தினின்றும் நீங்கிய, அதாவது பிறன் மனையாளை விரும்புதல் முதலிய, தீய செயல்களைச் செய்தவர்களையும் பொறுக்க வேண்டும் என்று இவ்வதிகாரம் கூறுவதாக அறிஞர்களும் ஆய்வார்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இராமன் போர்க்களத்தில் இராவணன் சீதையை ஒப்படைத்து விட்டால் அவனை மன்னிக்கும் பொறுமை கொண்டவனாக இருக்கிறான் என்பது தெ பொ மீ தரும் எடுத்துக்காட்டு.
பொறுத்தல் என்பது தாங்கிக் கொள்ளுதலையும் மறத்தலையும் உள்ளடக்கியது; மறத்தல் என்பது மன்னிப்புடன் கூடிய மறத்தல் குறித்தது; அறியாமல் செய்யப்படும் தீங்குகளைப் பொறுத்துக் கொள்வது என்பது பொறுத்தாரது உறுதியான மனவலியைக் காட்டும் அது கோழைத்தனம் அன்று; பொறுத்துக்கொள்ளுதலுக்கு மனவலிமை, பக்குவம், பெருங்குணம், பேராற்றல் யாவும் வேண்டும். பொறுத்தல் மென்மையாலன்று; வலிமையால் என்பதாம். உலகம் தீமைக்குத் தீமை செய்து ஒறுத்தவரை ஒரு பொருளாக மதிப்பதில்லை; பொறுத்தவரையே பொன் போல் நன்கு போற்றி மதிக்கும்; இவை பொறையுடமை தரும் செய்திகளாகும்.