பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம்
வாய்மை
இந்த பகுதியில் திருக்குறள் பொருட்பால்: வாய்மை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
வாய்மை என்பது பொய்சொல்லாமையைக் குறிக்கும். எதுவாய் இருந்தாலும் தீமை இல்லாதது வாய்மை; குற்றமற்ற நன்மை பயக்குமேல் பொய்யும் வாய்மையே என்பன வாய்மைக்கு வள்ளுவர் தரும் வரையறைகள். விதி விலக்கின்றி கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பொய்யாமையும் கொல்லாமையும் ஆகிய இரண்டும் ஆகும்; அவற்றில் பொய்யாமையை அறங்களெல்லா வற்றுள்ளும் நல்லது என்று கூறுகிறார் அவர். வாய்மையைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை. ஒருவர் வாய்மையின் வழியில் தவறாமல் செல்வாரேயானால் ஏனைய நன்மை எதையும் செய்ய வேண்டாம். ஏனென்றால் மற்றவை எல்லாம் அதனுள் அடங்கும் என்பது வள்ளுவரது வாய்மை மொழி.
வாய்மை
அறங்களெல்லாவற்றுள்ளும் நல்லது எதுவென ஆராய்ந்து அறிந்த வள்ளுவர் ‘வாய்மையே தாம் மெய்யாக் கண்டவற்றுள் நல்லது; பிற அல்ல’ என்று துணிகிறார்.
ஒரு சிறிதும் யார்க்கும் தீமை இல்லாதவற்றைச் சொல்லுதலே வாய்மையாகும் என்கிறார். வாய்மை என்பது மனங்கலந்து வரும் அகச்சொல்; ஆகவே நடந்த நிகழ்ச்சிகள் என்றாலும், பிறர் சொல்லியவை என்றாலும், உட்பண்பு அழியாதபடி வெளிப்படுதுதலே ‘யாதொன்றும் தீமையிலாத சொலல்’ ஆம். ‘கண்டதைச் சொன்னேன்; உண்மையைச் சொன்னேன்’ என்பதல்ல வாய்மை. மேலும் குற்றமற்ற நன்மை தருமானால் பொய்கூட உண்மையாகும் என்றும் சொல்லுகிறது குறள்.
TNPSC GROUP 2 PREVIOUS YEAR QUESTION PDF
TNPSC Group 4 Last 6 Years Old Question Papers
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
POTHU TAMIL BOOKS ORDER LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Download TNPSC App
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
மு.வரதராசன் விளக்கம்:
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின
மு.வரதராசன் விளக்கம்:
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
மு.வரதராசன் விளக்கம்:
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
மு.வரதராசன் விளக்கம்:
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
மு.வரதராசன் விளக்கம்:
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
மு.வரதராசன் விளக்கம்:
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
மு.வரதராசன் விளக்கம்:
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.