நோபல் பரிசு – முழு தகவல்
நோபல் பரிசு, 1833இல் பிறந்த ஆல்பிரெட் நோபலினுடைய உயிலின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. மனிதகுலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் பணியாற்றியவர்களுக்குத் தனது சொத்தின் 94 சதவீதத்தைப் பரிசாக அளிக்க வேண்டும் என்று அவர் உயில் எழுதிவைத்தார். இந்த உயிலின்படி 1901 முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
1969இல் மேற்கண்ட துறைகளுடன் பொருளாதாரமும் (ஸ்வேரியஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பரிசு) இணைக்கப்பட்டு, விருதுகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்தப்பட்டது. உலகில் வழங்கப்படும் பரிசுகளில் நோபல் பரிசே பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதுவரை 989 பேருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன; இவர்களில் 61 பேர் மட்டுமே பெண்கள்.
பரிசுகளின் விவரம்: ஒவ்வொரு நோபல் பரிசும் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், பாராட்டுரையுடன் கூடிய பட்டயம், இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியது. நோபல் பரிசு தனிநபருக்கும், அதிகபட்சமாக மூவருக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.
வென்ற நாடுகள்: நோபல் பரிசை அதிக அளவில் பெற்ற நாடுகளின் பட்டியலில் 406 பரிசுகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 137 பரிசுகளுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும், 113 பரிசுகளுடன் ஜெர்மனி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
நோபலும் இந்தியாவும்: இந்தியர் அல்லது இந்திய வம்சாவளியினர் இதுவரை 9 நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளனர். 1913இல் ரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்துக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையை அவர் பெற்றார். பரிசும் வயதும்: மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசை வென்ற சாதனைக்குச் சொந்தக்காரர் மலாலா யூசுப்ஸாய். 2014இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றபோது அவரின் வயது 17. அதிக வயதில் நோபல் பரிசை வென்றவர் ஜான் பி.குட்எனஃப். 2019இல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றபோது அவரின் வயது 97.
பரிசை மறுத்தவர்கள்: 1964ஆம் ஆண்டு தனக்கு அறிவிக்கப்பட்ட இலக்கியத்துக்கான நோபல் பரிசை ழான்-போல் சார்த்ர் (பிரான்ஸ்) நிராகரித்தார். நிறுவனங்கள் சார்ந்த அங்கீகாரங்களை எப்போதும் மறுத்துவந்துள்ளதாகப் பின்னாளில் பேட்டி ஒன்றில் கூறினார். வியட்நாம் அமைதி ஒப்பந்தத்துக்காகப் பேச்சுவார்த்தை நடத்தியதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸஞ்சர், லு டக் தோ ஆகிய இருவருக்கும் 1973ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. வியட்நாமின் அவலநிலையைக் காரணம் காட்டி நோபல் பரிசை லீ டக் தோ நிராகரித்தார்.
அரசுத் தடையால் மறுத்தவர்கள்: அரசாங்கங்களின் வற்புறுத்தலால் இதுவரை நான்கு நோபல் பரிசுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ரிச்சர்ட் குன் (1938), அடால்ஃப் பூடனன்ட் (1939), ஜெர்ஹார்டு டாஹ்மக் (1929) ஆகிய மூன்று ஜெர்மானியர்கள் நோபல் பரிசை ஏற்க ஹிட்லர் தடைவிதித்தார். 1958இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு போரிஸ் பாஸ்டர்னகுக்கு அறிவிக்கப்பட்டது. அந்தப் பரிசை நிராகரிக்குமாறு சோவியத் ஒன்றிய அரசு வற்புறுத்தியது.
பரிசு பெறும்போது சிறையிலிருந்தவர்கள்: ஜெர்மனியின் கார்ல் வான் ஒஸீட்ஸ்கி (1935), மியான்மரின் ஆங் சான் சூச்சி (1991), சீனாவின் லியு சியாபோ (2010), பெலாரஸின் அலெஸ் பியாலியாட்ஸ்கி (2022) ஆகிய நால்வரும் நோபல் பரிசு வழங்கப்பட்ட நேரத்தில் சிறையிலிருந்தனர். அனைவரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவர்கள்.