முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகள், மலை கிராம பகுதிகளில் உள்ள 1545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 1,14,095 குழந்தைகள் பயனடைய உள்ளனர். மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், மாணவர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகிய குறிக்கோளுடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி திங்கட்கிழமை ரவா, சேமியா, அரிசி, கோதுமை இதில் ஏதேனும் ஒரு உப்புமாவுடன் காய்கறி சாம்பாரும், செவ்வாய்கிழமை கிச்சடி வகையும் வழங்கப்படும். புதன்கிழமை பொங்கலுடன் காய்கறி சாம்பாரும், வியாழக்கிழமை உப்புமாவுடன் காய்கறி சாம்பாரும் அளிக்கப்படும். வெள்ளி அன்று ஏதேனும் ஒரு கிச்சடி வகையுடன் கேசரி போன்ற இனிப்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக ஒரு சில வழிமுறைகளும் அரசாணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலையில் கொடுக்கப்படும் உணவு சுத்தமான முறையில் சமைக்கப்பட்டு சூடாக வழங்க வேண்டும்.
உணவு தாயரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்த கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்து உணவின் தரத்தை உறுதி படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.