பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம்
நட்பியல் – நட்பு
இந்த பகுதியில் திருக்குறள் பொருட்பால்: நட்பியல் – நட்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
நட்பு அதிகாரப்பட்ட இடத்தில் கூற வேண்டுவன வெல்லாம் ஓரதிகாரத்தில் அடங்காமையால், நட்பையும் அதனோடு சேர்த்து எண்ணக் கூடியவற்றையும் உடன்பாட்டுவகையால் கூறுவனவாக ஐந்து அதிகாரங்களாக வகுத்துக்கொண்டார் வள்ளுவர். முதல் அதிகாரமான இதில் நட்பின் இயல்புகள் விளக்கப்படுகின்றன. அதிகாரப்பாடல்கள் தனிமனித நட்புக்கு மட்டுமன்றி, நாடுகளுக்கிடையேயான நட்புக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. ஓர் அரசு, நாடு, அரண், பொருள்களைப் பெற்று, அவற்றை அழியாமல் காக்கும் படையை உடையனாயினும் நட்பினர் துணையும் அவனுக்கு இன்றியமையாது வேண்டும். அரசுக்கு போர்க் காலத்தில் நட்பரசின் துணை தேவை. மாந்தர்க்குத் துன்பக்காலத்தில் நண்பர் உறவு உதவும்.
நட்பு
சமூக வாழ்வில் பலவகைப்பட்ட மக்களின் கூடி அவர்களின் துணையோடும்தாம் வாழ்க்கை நடத்தப்பட வேண்டி உள்ளது. மாந்தர் ஒருவரோடு ஒருவர் பழகுவதே உலகியலாக உள்ளது. வாழ்வு என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து ஒருவருக்கொருவர் உதவியாகவும் துணையாகவும் வாழ வேண்டிய ஒரு சமூக உறவாகும். இந்நிலையில் மனித வாழ்வு சிறந்ததாக நட்புத் தொடர்பு தேவையாகிறது. நட்பு என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்றியமையாது வேண்டப்படும் ஓர் உறவாகிவிட்டது.
நட்பு செய்தற்கு அரிதானது, பகைவர் சூட்சியினின்று காக்கும் காவலாகவும் நட்பு அமையும்; நற்குணம் கொண்டோருடனான நட்பு வளர்பிறைபோல வளரும். சிறியோர் நட்புத் தேய்பிறைபோலத் தேய்ந்துகொண்டே போகும்; ஒர் நூலைப் படிக்க படிக்க அதன் நயம் புதிதுபுதிதாக வெளிப்படுவது போன்று, நட்பு பழகப்பழக புதிய ஆழங்களும் இனிமையும் தெரிய வரும்; நட்டல் நகுதற்காக அன்று; தவறு கண்டுழித் திருத்துதற்காக; உணர்ச்சி ஒத்ததே நட்பு; உள்ளப் பொருத்தமே நட்பு. முகத்தில் மட்டும் மகிழ்ச்சிக் குறியினைக் காட்டி உள்ளத்தில் மலரா நிலை நட்பன்று; வந்த தீமைகளை வழி விலகச் செய்து, அழிவில், தானும் உடன் வருந்துவதே நட்பாம்; துன்பக்காலத்தில் விரைந்து வந்து உதவுவார் நண்பர்; அயர்வின்றி தேவைப்படும் வேளையெல்லாம் வேறுபடாமல் இயலும் வழிகளிலெல்லாம் உதவுவது நட்பு; நட்பினர் இருவரும் இவர் எமக்கு இன்ன தன்மையார் இன்ன முறையார் என்று சொன்னாலே நட்பின் உயர்வு குறையும்; இவை – நட்பின் சிறப்பு, பயன், நட்பு விளைவதற்குரிய காரணங்கள் நட்பின் இலக்கணம் முதலியன – நட்பு அதிகாரத்தில் கூறப்படுகின்றன.